ஒன்றும் பலவும் (தொடர்)
வெகுவாகக் காணப்படும் எழுத்துப் பிழைகளுள் குறிப்பிடத் தக்கவை, மறுப்புச் சொற்களாகும். நாள், வார, மாத இதழ்களிலும் இணையக் கட்டுரைகளிலும் நம் கண்களை உறுத்தும் பிழைகள் இந்த மறுப்புச் சொற்களில் ஏராளம் என்றால் மிகையாகாது. சற்றே ஊன்றிப் படியுங்கள்.
அன்று – அல்ல – அல்லன் – அல்லர்:
ஒருமை, பன்மை வேறுபாடுகளுக்குத் தகுந்தவாறு இச்சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது, தமிழ் இலக்கண வரம்பாகும். மாறுபாடான தன்மையைச் சுட்டிக் காட்டி மறுத்துரைப்பதற்காக, “இது சரியல்ல” என்றோ, “இது சரியில்லை” என்று எழுதுவது தவறில்லாதது போன்று தெரிகிறது. ஆனால், தவறு! எப்படி?
‘இது’ என்பது ஒருமையாகும். ‘அல்ல’ என்பது, பன்மையின் மறுப்புச் சொல்லாகும். ஒருமையும் பன்மையும் ஒன்றுபடுமா? எனவே, ‘இது சரியன்று’ என எழுதுதலே சரியாகும் என்பதை அறிக! ‘அன்று’ என்ற ஒருமை மறுப்புச் சொல்லின் பன்மையே ‘அல்ல’ என்பதாகும். இவ்வாறு தவறின்றி எழுதும் பழக்கம் கைவரப் பெறுவது எவ்வாறு? எழுதிச் செல்லும்போது ஒருமை-பன்மை மீது சற்றே கவனம் வைத்தால் போதும். அவ்வளவுதான்.
ஒருவர், “நான் குற்றவாளியில்லை” என்று எழுதினார். ஆனால், அவர் தவறிழைத்தவர்! எதில்? எழுத்தில். ‘அல்ல’, ‘இல்லை’ என்ற சொற்களை ஒருமையுடன் இணைத்து எழுதிய குற்றவாளி ஆகிவிட்டார்! “நான் குற்றவாளி அல்லன்” என்றே எழுதியிருக்க வேண்டும்.
இது போன்றே, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்லர்” என்று எழுதுவதற்குப் பகரமாக, “அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல” என்று எழுதக் கூடாது. ‘அல்லன்’ என்ற ஒருமையின் பன்மை ‘அல்லர்’ என்பதாகும். இவை உயர்தினைக்கே வரும். அஃறிணையுடன் வரும் மறுப்புச் சொல் ‘அல்ல’ என்பதாகும். “காரணங்கள் அவையல்ல” என்பது போன்று எழுதுதல் வேண்டும்.
சில – பல – சிலர் – பலர்:
இவையனைத்தும் பன்மைகளாகும். ஆனால், இவை சுட்டும் திணைக்குத் தக்கவாறு மாறுபட்டுப் பயன்படுத்தப்படும். ‘சில’ என்பதும் ‘பல’ என்பதும் அஃறிணைக்கே சார்பாக வரும். “சில நண்பர்கள்” என்றோ, “பல மக்கள்” என்றோ எழுதுவது தவறாகும். இவற்றை, “நண்பர்கள்” என்று மட்டுமோ, “மக்கள்” என்று மட்டுமோ எழுதலாம். அல்லது, “நண்பர்கள் பலர்” என்று, அல்லது “மக்கள் பலர்” என்றும் எழுதலாம்.
உண்டு:
பலர் இச்சொல்லை உயர்திணைக்கும் அஃறிணைக்கும் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர்! ‘இருக்கின்றது’ என்பதற்கு இணையான மற்றொரு சொல், ‘உண்டு’ என்பதாகும். இதனை உயர்திணைக்குப் பயன்படுத்துவது, பெருந்தவறாகும். “ஆடு உண்டு”, “மாடு உண்டு” என்று சொன்னால் தவறில்லை. “மனிதன் உண்டு” என்று சொன்னால்....? தவறுதானே? “மனிதன் உள்ளான்” அல்லது, “மனிதர் உள்ளார்” அல்லது, “மனிதன் இருக்கின்றான்” என்று எழுதுதலே முறையாகும்.
(திருத்தங்கள் தொடரும், இன்ஷா அல்லாஹ்....)
- அதிரை அஹ்மது
2/29/2012 12:36:00 AM
JAFAR

Posted in:
5 கருத்துக்கள்:
இந்தக் கட்டுரையோடு தொடர்புடைய ஐயம் ஒன்று.. ஆசானின் விளக்கத்தை வேண்டி பதிகிறேன்..
"அவர் நல்லவர் ________(எதிர்பதம்)" இந்தத் வாக்கியத்தில், கோடிட்ட இடத்தில் எதிர்பதம் ஒன்று போடவேண்டும். மேலும் இங்கு 'அவர்' எனும் சொல், மரியாதை கலந்த ஒருமைச் சொல்லாகும். கோடிட்ட இடத்தை நிரப்பும் அந்த சரியான எதிர்ப்பதம் எது? ஏன்?
அஸ்ஸலாமு அலைக்கும்.
சாச்சா, உங்களின் தமிழ் வகுப்பு நல்ல முறையில் சிறப்புடன் போய்க்கொண்டிருக்கிறது.
தங்களின் தெளிவுரைக்காக என் சந்தேகம் இதோ:
பல பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் மக்கள் மேல் உள்ள கவலையை "அக்கறை" என்றும் "அக்கரை" என்றும் எழுதி வருகிறார்கள். இதனால் எனக்கும் குழப்பமாக உள்ளது இங்கு இந்த "றை" யைப்பயன்படுத்துவதா? அல்லது இந்த "ரை" யைப்பயன்படுத்துவதா? என்று. தாங்கள் பின்னூட்டத்தில் தெளிவு படுத்தினால் நல்லது.
சகோ. நெய்னா முகமதின் “அக்கறை” யான கேள்வி !
பெயரர் ஷஃபாஅத்துக்கு:
'அல்லர்' என்பதே பொருத்தம்.
மகனார் நெய்னாவுக்கு:
சகோதரர் நிஜாம் முந்திக்கொண்டார். 'அக்கரை' என்பது, அந்தக் கரை (குளக்கரை, கடற்கரை) என்று பொருள்படும்.
ஜஸாக்கல்லா க்ஹைர்!
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
பொது இடத்தில் தங்கள் கருத்துகளைப் பதியும்போது அல்லாஹ் நம்மைக் கண்காணித்துக் கொண்டுள்ளான் என்பதை மனதில் இருத்தி,தனிப்பட்ட முறையில் எவரையும் புண்படுத்தாத வகையில் தங்கள் கருத்துகளைப் பதியுங்கள்.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!
எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!