தொலைந்துபோன அதிரை பஞ்சாயத்து!

தெருப்பெருமை அல்லது பழங்கதை பேசிமகிழும் நோக்கமின்றி, எதிர்கால இளைய தலைமுறையினர் அழிந்துவிட்ட நமது அடையாளர்ங்களைத் தெரிந்து கொள்ளவும், தொலைந்துவிட்ட நம் பாரம்பர்யப் பெருமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இதைப் பதிவு செய்கிறேன்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை தஞ்சை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முஸ்லிம்கள் மட்டுமின்றி மாற்றுமத மக்களின் மார்க்க மற்றும் பொதுவான வழக்குகளைத் தீர்த்து வைக்கும் நீதிமன்றமாக அதிராம்பட்டினம் திகழ்ந்தது என்பதை நம்மில் எத்தனைபேர் அறிவோம்?

அரசியலும் மதவாதமும் கைகோர்க்கும் 1990ஆம் ஆண்டின் தொடக்கம்வரை காதிர் முஹைதீன் கல்விக் குழுமங்களின் தாளாலரும் அதிரை நகரப் பேரூராட்சியின் சேர்மனுமாகிய மர்ஹூம் S.M.S ஷேக் ஜலாலுதீன் (தச்சர் தெரு/சேர்மன்வாடி), மர்ஹூம் A.M.S.ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் (ஆஸ்பத்திரி தெரு), மர்ஹும். கோ. முஹம்மது அபூபக்கர் ஆலிம் (ஆஸ்பத்திரி தெரு) ஆகியோர் நன்கு அறிமுகமானவர்கள். இவர்களிடம் வரும் வழக்குகளை இந்தியச் சட்டம் மற்றும் ஷரீஅத் சட்டங்களுக்கேற்ப ஆய்வுசெய்து நியாயமான தீர்ப்பு வழங்குவார்கள் என்று நம்பப்பட்டது.

'நடுத்தெருவான் நாணயஸ்தன்' என்ற சொலவடையும் அதிரை நகரத்தில் புழக்கத்தில் இருந்தது. நாணயத்திற்குப் பணம் என்ற பொருளிருந்தாலும் நேர்மை, வாய்மை, உண்மை என்றும் பொருள் கொள்ளப்படும். அதிரையின் பெரும் நிலக்கிழார்களாக நடுத்தெருவாசிகள் என்றறியப்படும் நடுத்தெரு, ஆஸ்பத்திரி தெரு, செட்டித் தெரு, ஆலடித் தெரு,செக்கடித் தெரு மற்றும் புதுமனைத்தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் இருந்துள்ளார்கள்.

ஜப்பான்,இலண்டன் அமெரிக்கா என அதிரைவாசிகள் பொருளீட்டச் செல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே பர்மாவுக்கும், இலங்கைக்கும் வர்த்தகம் செய்து பொருளீட்டியுள்ளார்கள். கோனா ஆலிம்ஷா சந்ததியினரால் இலங்கையில் (சம்மாந்துறை என்று நினைக்கிறேன்) இறையில்லத்துடன் கூடிய குர்ஆன் மதரஸாவையும் கட்டி நிர்வகித்துள்ளார்கள். ஒவ்வொரு ரமலான் மாதமும் சுற்றுவட்டார ஏழைகளுக்கு அதிகமான ஜகாத் நிதி வழங்குவதிலும் மேற்படி தெருவாசிகள் முன்னனியில் இருந்திருக்கிறார்கள். (இங்கு மற்ற தெருவைச் சார்ந்தவர்களை குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ள வேண்டாம்).

இப்படியாக, நீதி மற்றும் நிதியில் சிறந்து விளங்கிய அதிரையின் அருந்தவப் புதல்வர்களைக் கொண்டிருந்த நாம்,நிதிக்கும், நீதிக்கும் யாராரை எல்லாமோ நண்பர்களாக்கிக் கொண்டு, கூழைக்கும்பிடு போட்டு பிழைக்கும் அவல நிலைக்கு யார் காரணம்? ஜப்பான்,அமெரிக்கா,லண்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளிலிருக்கும் நமதூர் மக்களிடம் இன்று ஓரளவு செல்வம் இருந்த போதிலும்,அக்கால மக்களுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் இருக்கிறதா? என்பதையும் அறியக் கடமை பட்டுள்ளோம்.

செல்வமும் நேர்மையும் கொண்டிருந்தவர்கள் மார்க்க அறிஞர்களுடன் கூட்டணி சேர்ந்திருந்தக் காரணத்தால்தான் நீதிக்கும் நேர்மைக்கும் அதிரை முன்னுதாரணமாகக் கொள்ளப்பட்டது என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும். அத்தகைய மார்க்க அறிஞர்களால் பயிற்றுவிக்கப்பட்ட இன்றைய ஆலிம்களுக்கு நாம் உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா?இதற்கு யார் காரணம்? என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

<<<அபூஅஸீலா-துபாய்>>>
Share:

15 comments:

 1. //(இங்கு மற்ற தெருவைச் சார்ந்தவர்களை குறைத்து மதிப்பிடுவதாகக் கொள்ள வேண்டாம்).//

  மற்ற தெருவின் இது போன்ற சமூகப்பணிகளில் பங்கு பெற்ற முக்கியமானவர்கள் பற்றி தங்களுக்கு தெரியவில்லை அல்லது அறிந்திருக்கவில்லை என்றும் சேர்த்திருக்கலாம். ஏற்கெனவே தெருவாரியாக பன்னா, கெலுத்தி என்று பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு அவல் கிடைத்தது போல் உள்ளது.

  ReplyDelete
 2. மற்ற தெருவில் அரசியல் அல்லாத சமுதாயப் பணிக்கு அற்பணித்தவர்களைப் பற்றி எழுதினால் நாங்களும் தெறிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 3. மற்ற தெருவில் அரசியல் அல்லாத சமுதாயப் பணிக்கு அற்பணித்தவர்களைப் பற்றி எழுதினால் நாங்களும் தெறிந்து கொள்கிறோம்.

  ReplyDelete
 4. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான(ரெண்டும் ஒன்னுதான்)கதைப்போல்,சகோதரர் அபு அசீலா நமதூர் பாரம்பரியம் பற்றி எழுத போவது சில தெரு சகோதரர்கள் மாற்றுக்கருத்து சொல்லி இருப்பதால், நமது சமுதாயத்திற்குள் மேலும் பிரிவினைகள் அதிகமாகுமோ என் அஞ்சுகிறேன்.அதனால் சகோதரர் உங்கள் கட்டுரையை நிறுத்தினால் நல்லது எனத்தோன்றியதால் இதை எழுதுகிறேன். நீங்கள் நன்கு படித்தவர் என நினைக்கிறேன்.தாங்கள் இதுப்பற்றி பரிசீலனைப் படுத்தவும்.தவறாக சொல்லியிருப்பதாக நீங்கள் நினைத்தால் மன்னிக்கவும்,
  அன்பு சகோதரன்.

  ReplyDelete
 5. அபூஅஸீலா கவணிப்பாரா?


  இது அதிரை எக்ஸ்பிரஸா அல்லது நடுத்தெரு எக்ஸ்பிரஸா? பொதுவாக கட்டுரை எழுதும்போது பிரபலங்களின் பெயரை குறிப்பிடலாமே தவிர அவர் சார்ந்த தெருவை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. தெருவை குறிப்பிட்டால் தான் ஒருவரை அடையாளம் தெரியும் என்றால் அவர் ஊருக்கு சொந்தம் அல்ல! அவர் சார்ந்த தெருவுக்கு மட்டும் தான் சொந்தம்.

  ReplyDelete
 6. இக்கட்டுரை பரிபோன நமதூரின் நன்மதிப்பைப் பற்றிய ஆக்கமாக இருப்பதால் மற்றத் தெருவாசிகளிடம் கலந்துரையாடி அத்தெருவாசிகளின் மதிப்புமிக்க பெரியோர்களின் கடந்த கால செயல்களை அடுத்து வர இருக்கும் இக்கட்டுரையின் தொடர்ச்சியாக வெளியிடுவது கட்டுரையாசிரியருக்கு நலமானதாகவும் தேவையற்ற குற்றச்சாட்டுகளை தவிர்ப்பதாகவும் அமையும்.

  ReplyDelete
 7. அபு அஸீலாவின் மீது குற்றம் சாட்டுவதற்கென்றே ஒரிருவர் கடை வைத்திருப்பது போல் தெரிகிறது. அதனை பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து எழுதவேண்டும்.

  அநானி - 1

  ReplyDelete
 8. அபூஅஸீலாAugust 17, 2008 at 2:22 PM

  "அவர் அணிந்திருக்கும் சட்டை அழகாக உள்ளது என்றால் மற்றவர்களின் சட்டை அழகில்லை" என்று எடுத்துக் கொள்வதைப் போலுள்ளது சிலரின் புரிந்து கொள்ளல்! ஆகவேதான் "தெருப்பெருமை அல்லது பழங்கதைபேசி மகிழும் நோக்கமின்றி, எதிர்கால இளைய தலைமுறையினர் அழிந்துவிட்ட நமது அடையாளங்களைத் தெரிந்து கொள்ளவும், தொலைந்துவிட்ட நம் பாரம்பர்யப் பெருமைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இதைப் பதிவு செய்கிறேன்" என்று முன்னுரையில் சொல்லியே தொடங்கினேன்.

  "தெருப்பெயருடன் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவர்கள் அந்தந்தத் தெருவின் மைந்தர்களே தவிர ஊரின் மைந்தர்களல்ல" என்றுள்ளார் ஒருவர். இன்னும் கொஞ்சம் குறுகலான பார்வை (Narrow Minded) கொண்டிருப்பாரேயானால் அவர்களை வீட்டோடு நிறுத்தி மகிழ்ந்திருப்பார்!

  "நமது அடையாளங்களை, நம் பாரம்பர்யப் பெருமைகளை" என்று பொதுமை படுத்திய பின்னரும் தெருவாரி மேலாதிக்கம் கொண்டுள்ளதாகக் கருதுவது வாசகரின் புரிந்து கொள்ளலின் குறைபாடே தவிர பதிவரின் குறையன்று!

  மேற்கோளிடப்பட்டுள்ள தெருக்களும் அதிரையின் ஒருபகுதியே என்பதால் அவற்றைக் குறிப்பிட்டதில் தவறில்லை என்று நினைக்கிறேன். மற்றத் தெருவைச் சார்ந்த அதிரையின் அருந்தவப் புதல்வர்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டால் பதிவின் நோக்கத்தை மேலும் தெளிவாகச் சொல்ல வசதியாக இருக்குமென்பதால் மென்மேலும் குறைகூறித் திரி(யா)க்காமல் பின்னூட்டமிட்டு அறியத்தரலாமே!

  மாற்றுக் கருத்திட்டவர்களுக்கும், ஊக்கப் படுத்தியவர்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும்,சகோதரர் அபு அசீலாவிற்கு,வாழ்த்துக்கள்,படித்த உங்களுக்குத்தெரியும் எப்படியெழுதுவதென்று.மற்ற சகோதர்களால் தவறாகப்புரிந்து கொள்ளப்பட்டுவிடுமோ என்று என் மனதில் ஏற்பட்டதையே எழுதியிருந்தேன். நானும் நமதூர் பற்றிய வரலாறு பற்றி அறிய மிக ஆவலாக உள்ளேன்.அல்லாஹ் துணை நிற்பானாக.ஆமின்.துபாய்க்கு வந்தால் நல்ல சட்டை
  வாங்கனும்.ஹிஹிஹி...சும்ம்ம்ம்மா தமாஸ்.
  வாழ்த்துக்கள்,
  முஹம்மது தஸ்தகீர்..

  ReplyDelete
 10. அபு ஆசிலா வழக்கம் போல் சிண்டு முடியும் வேலையை தொடங்கிவிட்டார்.எப்போதும்போல் தெருப் பெருமை,வெறி கொண்டு தன் பேனா மையை நிரப்புகிறார்.இது அநாகரீகமான செயல்.அல்லாஹ்வின் தண்டனைக்கு அவர் அஞ்சிக் கொண்டு இனியாவது இஸ்லாம் குறித்த விளக்கங்கள்,நம் ஊருக்கு தேவையான அட்வைஸ்கள் எழுதினால் எல்லாரும் வாழ்த்துவார்கள்,துவா செய்வார்கள்.சிந்தியுங்கள் நண்பரே,இதை நீங்கள் சாதரணமாக எடுத்துக்கொண்டு,இதற்கும் வம்படிப்பீர்கலேயானால்,ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்,இன்ஷா அல்லாஹ் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில்,இப்படி நல்ல விஷயம் எழுத சொல்லி,எத்தி வைத்ததை சாட்சியாக்குவேன்.அல்லாஹ் போதுமானவன்.

  ReplyDelete
 11. அபூஅஸீலாAugust 18, 2008 at 2:25 PM

  திரும்பத் திரும்பச் சொல்லியும் தெருப்பெருமை பேசுவதாகச் சொல்வதைப் பார்க்கும்போது சகோ.தஸ்தகீர் சொன்னதுபோல், பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையாகத்தான் இருக்கிறது.

  தீவிரவாதத்தின் பெயரால், முஸ்லிம்கள் நிறைந்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஊடகங்கள் நம்மைப் பற்றித் தாறுமாறாக எழுதிய போது, "நமக்கொன்றும் ஆகவில்லை" என்று வாய்மூடி, சுயநலமிகளாக,மவுன சாட்சியாக இருந்துவிட்டு, நமது ஊருக்குப் பெருமைச் சேர்த்தவர்களைப் பற்றி, தெரு அடையாளத்துடன் குறிப்பிட்டதால் வெகுண்டெழுத்து வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள்.

  உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டு குலம் கோத்திரம், தெரு என்று பெருமை என்று குறுகிய கண்ணோட்டத்தில் அணுகுவதிலிருந்து அவர்களின் அறியாமையும் குறுகிய பார்வையும் வெளிப்படுகிறது. நிற்க,

  ஒரு காலத்தில் நம்மிடம் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்களே, இன்று நம்மைக் கீழ்த்தரமாக நடத்தி, நமக்கு எதிராகச் செயல்படுவதற்குக் காரணத்தைக் கண்டறிந்து களையும் நோக்கில் சொல்லப்பட்டதை மனம் போனப்போக்கில் திரிக்க முடியும் என்பதை பதிந்த பின்னரே உணர்ந்தேன்.

  இத்தளத்தைப் பார்வையிட்டுச் சென்ற எத்தனையோ பேரோடு நானும் இருந்திருக்காமல்,அதிகப்பிரசிங்கித்தனமாக,முகம்காட்டப் பயந்து இருட்டில் கல்லெறியும் வாய்ச்சொல் வீரர்கள் மத்தியில் அறிந்தவற்றைச் சொல்லத் துனிந்ததும், பணிச்சுமையிலும் ஊர்ப்பாசத்தால் உரிமையுடன் எழுத முனைந்ததும் தவறோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

  மேற்கொண்டு எழுத வேண்டுமா என்பதை எதிர்வரும் பின்னூட்டங்களை வைத்து முடிவு செய்வேன். தயவு செய்து விருப்பு வெருப்பின்றி கருத்துச் சொல்லவும்.

  ReplyDelete
 12. சகோதரர் அபுஅஸீலா அவர்களுக்கு நீங்கள் தொடர்ந்து உங்களுடைய பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய கட்டுரைகள் தொடர வேண்டும். வசைபாடுபவர்கள் பாடிக்கொண்டுதான் இருப்பார்கள் அதைப்பற்றி நீங்கள் தயவு செய்து கவலை படவேண்டாம்.

  ReplyDelete
 13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  எனது அருமையான அதிரை நன்பர்களுக்கு...
  தயவு செய்து பின்னூட்டம் எழுதுபவர்கள் உங்களுக்கு எழுத சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக கட்டுரையளரை குற்றவாளியாக நிறுத்திப் பாற்க ஆசைப்பட வேண்டாம். உங்களுடைய மறுப்புகளை பொதுவாகப் பதியவும். ஒருவர் தான் அறிந்ததை, தான் உண்மை என்று நம்புவதை எழுதுவதற்கு முழுமையான உறிமை படைத்தவராவார். அவர் அறிந்த மட்டும் அவர் எழுதுகிறார், மேலதிகமாக நீங்கள் அறிந்திறுந்தால் குறை பேசித்திரியாமல் நீங்கள் அறிந்ததை பதிய நீங்களும் உறிமை படைத்தவரே.

  மஅஸ்ஸலாம்

  அபூ ஈசா

  ReplyDelete
 14. mohamedthasthageerAugust 20, 2008 at 9:05 AM

  அஸ்ஸலாமு அலைக்கும்,சகோ-அபூஅஸீலா! நீங்கள் எழுத நினைத்த அந்த 'கரு'உங்கள் மனதில் இருக்கும்.தயவுசெய்து-கருச்சிதைவுக்கு உடன்பாடாதீர்கள்.அதிரைப்பற்றிய உங்கள் ஆக்கம் தயவு செய்து வெளியிடவும்.எனக்கு நம்பிகை உள்ளது உங்கள் மனதில் கொண்ட எழுத்தின் கரு ஊரின் ஒற்றுமையைச் சிதைக்காது காரணம் கரு கலைகப்படலாம் ,கருவே சிதைக்காது. உங்களிடம் இது விசயமாக கருத்து பறிமாற்றம் செய்துகொள்ள விரும்புகிறேன்.மேலும்,உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவையும் உள்ளதால் எனக்கு மின் அஞ்சல் இட முடியுமா? crowngeer@gmail.com,

  ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை எக்ஸ்பிரஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது